Breaking News

இன்ஜி., தரவரிசை பட்டியல் ஜூனில் வெளியீடு


பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, ஜூன் முதல் வாரத்தில், அண்ணா பல்கலை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போலி தர வரிசைப் பட்டியல்களை நம்ப வேண்டாம் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். 

வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 596 இன்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த ஆண்டில், இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், கவுன்சிலிங் முடிவில், 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் கூடுமா அல்லது குறையுமா என்பது, இம்மாத இறுதியில் தெரிய வரும். ஏற்கனவே, மூன்று கல்லூரிகள் தங்கள் கல்லூரியை மூடுவதற்கான கடிதத்தை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் கொடுத்துள்ளன. இதற்கு இரண்டு அமைப்புகளும் அனுமதி அளித்து, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்காமல், படிப்படியாக புதிய மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், பல கல்லூரிகள் சில படிப்புகளை முடித்துக் கொள்ளவும், சில புதிய படிப்புகளை சேர்க்கவும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் அனுமதி கேட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிகள் மற்றும் படிப்புகளுக்கான அனுமதியை, அண்ணா பல்கலையிடம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும். பின், கல்லூரிகளுக்கான இணைப்பு ஆணையை, இம்மாத இறுதியில், அண்ணா பல்கலை பிறப்பிக்கும்.

இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:மே முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் வந்ததும், அந்தக் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் அனுமதி, மே இறுதி வாரத்திற்குள் வழங்கப்படும். அதன்பின், எந்தெந்த கல்லூரிகள் இந்த ஆண்டு செயல்படும், அவற்றிலுள்ள படிப்புகள் எவை என்ற விவரம் தெரியும். அதற்குள், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்படும். இதையடுத்து, இந்த ஆண்டு அதிகபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்பட்டு, கல்லூரிகளின் தர வரிசை நிர்ணயிக்கப்படும். பின், ஜூன் முதல் வாரத்திற்குள், கல்லூரிகளின் 'கட் ஆப்' மற்றும் தர வரிசைப் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஜூன் இறுதி அல்லது ஜூலை 1ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்.அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ பட்டியல் தவிர, தற்போதே பல போலி தர வரிசைப் பட்டியல்கள் வெளியாவதாக, தகவல்கள் வந்துள்ளன. மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.