விருதுநகர்: 'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி, நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது.
இதற்கான விண்ணப்ப வினியோகம் ஏப்.,24ல் துவங்கியது; விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தேர்வு நடப்பதால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளியில் பணி வாங்கித் தருவதாக, அரசியல்வாதிகள் சிலர் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கும் புகார் சென்றுள்ளது. 'இதனால் சர்ச்சை இன்றி தேர்வு நடத்த வேண்டும்' என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இதில் 120 வினாக்கள் அறிவியல் பாடம்; 30 வினாக்கள் பொது அறிவு பகுதி யில் இருந்து இடம் பெறும். தேர்வு பெறுவோரில் ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத் தேர்விற்கு (25 மதிப்பெண்) அழைக்கப்படுவர்.வேலைவாய்ப்பக பதிவு மூப்பிற்கு 10 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு 2, டிகிரிக்கு 3, பணி அனுபவத்திற்கு 2, கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 என மதிப்பெண் வழங்கப்படும். இதில் சிபாரிசுக்கு இடம் தராமல் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.