நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில
நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்
மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு
நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும்
தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைவர் எட்வர்டு ஜெயசீலன்
தலைமையில் நடைபெற்றது.அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும்,
பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ்
முன்னிலை வகித்தார்.பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன்
வரவேற்றார்.
கூட்டத்தில் நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள
நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.பின்னர் நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பெரும்
இழப்பிற்கு, இந்திய அரசு செய்து வரும் உதவிக்கு சங்கத்தின் சார்பில்
பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேபாள நிவாரணப் பணிக்காக சங்கங்களின்
உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை, பிரதமரின் நிவாரண நிதிக்கு
அனுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.