அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக
முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடமை- பொறுப்பு
கோடை விடுமுறைக்குப்பின் வரும் ஜூன் 1-ந்தேதி
முதல் பள்ளிகள் திறந்து செயல்பட உள்ளது. அதற்கு முன்னதாக கோடை விடுமுறை
தினங்களில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பு
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல பள்ளி
ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேவையின் அடிப்படையில் அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகளைத் துவக்கவும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைத்
தவிர்க்கவும் வேண்டியது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின்
கடமையாகும். பள்ளியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பள்ளித்
தலைமையாசிரியர்களின் செயல்பாடுகளை பொறுத்தே அமைகிறது. எனவே பள்ளித்
தலைமையாசிரியர்கள் தனது கடமைகளையும் பொறுப்பினையும் உணர்ந்து செயல்பட
வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்று முன்னேற்றம்
காணும் நிலை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழக கூட்டங்களை
கூட்டி அவர்களது கருத்தை பெற்று, கடந்தஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கையை
அதிகப்படுத்த வேண்டும். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்
தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுடன்
ஒருங்கிணைந்து 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர்களின் பட்டியலைப்
பெற்று அவர்களை தங்கள் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்கவும், அதேபோல்
அருகில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு 8-ம்
வகுப்பு முடித்தவர்களின் பட்டியலை பெற்று தங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பில்
சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும். இக்கல்வி ஆண்டில் 10 மற்றும்
பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் கோடை விடுமுறை நாட்களிலேயே
வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல் பள்ளி திறக்கும் நாளன்று அனைத்துவகுப்பு
மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள்
காலதாமதமின்றி குறைபாடின்றி வழங்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள்
வெளிவந்து, மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்ட உடன்,
மாணவர்களின் கல்வி தகுதியை கணினி வழியில் வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பதிவு
செய்யும் பணியை எவ்வித தொய்வின்றி முழுமையாக முடிக்க கல்வித்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு
பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவதுடன், 1 முதல் பிளஸ்-2வரை மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை முதன்மை கல்வி அலுவலரும், மாவட்ட கல்வி அதிகாரியும் உறுதி செய்ய
வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.