Breaking News

மாநில தரப்பட்டியலில் 'துபாய்' இடம் பெற்றது எப்படி? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்


பள்ளிக்கல்வித்துறை சார்பில், வெளியிடப்பட்ட பிளஸ் 2 மாநிலத்தரப்பட்டியலில் 'துபாய்' ஒன்பதாம் இடத்தை பெற்றது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர், கூடுதலாக இடம்பெற்ற துபாய் மற்றும் புதுச்சேரி பெயர்களை நீக்கி மாவட்டங்களுக்கு புதிய தரப்பட்டியல் அனுப்பப்பட்டது. 

கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்தில், மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடத்தை பெற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்தும் பட்டியல் அனுப்பப்பட்டது. இதில், துபாய் ஒன்பதாவது தரத்தை பெற்று இருந்தது.தமிழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கவேண்டிய தரவரிசை பட்டியலில், துபாய் இடம் பெற்றதால், அரசு தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை 'வாட்ஸ் அப்' மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது.
பழைய பட்டியலின் படி, கோவை மாவட்டம், 10ம் இடத்தில் இருந்தது, தொடர்ந்து துபாய் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், கோவை ஒன்பதாம் இடத்தில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,''துபாய் பகுதியில் வசிக்கும் தமிழர்களின் பள்ளிகள் வாயிலாக தேர்வெழுதிய விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது. தமிழக பாடத்திட்டத்தின் கீழ், ஆந்திரா, மும்பை, டில்லி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழர்கள் தேர்வெழுதிவந்தனர். தற்போது, இப்பகுதிகளுக்கு உட்பட்ட பாடத்திட்டத்துடன் இணைந்துவிட்டனர். துபாயில் ஒரு பள்ளியிலும், புதுச்சேரியிலும் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அப்பகுதிகளில், தேர்வெழுதியவர்களின் முடிவுகள் குறித்த, பட்டியலே தவிர மாநில தரப்பட்டியல் கிடையாது.
துபாய், புதுச்சேரியை நீக்கியே தரவரிசை முடிவுசெய்யப்பட்டுள்ளது,'' என்றார். துபாயில் தேர்வு எப்படி? துபாயில் அரபு மற்றும் உருது மொழியின் கீழே அனைத்து பாடத்திட்டங்களும் உள்ளதால், அங்கு வாழும் தமிழர்கள்சார்பில், 'கிரசண்ட்' என்ற தனியார் பள்ளி நடத்தப்படுகிறது. இப்பள்ளி வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுகள் தமிழக அரசுத்தேர்வுத்துறையால் நடத்தப்படுகிறது. பிளஸ்2 தேர்வை, 20 மாணவர்கள் எழுதினர். அதில், 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் இந்திய துாதரகத்துக்கு அனுப்பப்பட்டு,அவர்களது கண்காணிப்பில் தேர்வு நடத்தப்படுகிறது.