பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, தன் சொந்த மாவட்டமான வேலூரை, கல்வி தரத்தில் உயர்த்த முடிவு செய்து, நாமக்கல் மாவட்ட சாதனைக்கு காரணமாக கூறப்பட்ட, மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் குமாரை, தன் மாவட்டத்தில் நியமித்தார்.
ஆனாலும், பிளஸ் 2 தேர்வில், வேலூருக்கு கடைசியிடம் கிடைத்ததால், அமைச்சர், 'ஆடி'ப்போய் உள்ளார்.
கடந்த 2013 - 14ம் கல்வியாண்டில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வெழுதிய, 31,527 பேரில், 30,453 பேர் தேர்ச்சி பெற்று, மாநிலஅளவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இதற்கு, அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர்,குமாரின் தீவிர முயற்சி தான் காரணம் என, கூறப்பட்டது. அந்த ஆண்டு, வேலூர் மாவட்டம், மாநில அளவில், 28வது இடத்தை பிடித்திருந்தது. வேலூர் மாவட்டத்தில், தேர்வு எழுதிய, 41,337 பேரில், 35,206 பேர் தேர்ச்சி பெற்றனர். குமாரின் பராக்கிரமத்தை கேள்விப்பட்ட, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான வீரமணி, தன் மாவட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்த, நாமக்கல் மாவட்டத்தில் இருந்த குமாரை, தன் மாவட்டத்துக்குநியமித்தார். குமாரும், தன்னால் முடிந்த அளவிற்கு, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், 28வது இடத்தில் இருந்த, வேலூர் மாவட்ட மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை, குமார் உயர்த்துவாரா என, பிளஸ் 2 தேர்வு முடிவை, அமைச்சரும், மாவட்ட மக்களும், ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான, பிளஸ் 2 தேர்வு முடிவைப் பார்த்து, அமைச்சர், ஒப்பாரி வைக்காத குறையாக, மனிதர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். 'ஏற்கனவே, 28வது இடத்திலிருந்த மாவட்டம், இந்த ஆண்டு, 'ரிவர்ஸ்' அடித்து, 32வது மாவட்டமாக, கடைசி இடத்திற்கு போய்விட்டதே' என, அமைச்சர் நொந்து போய் உள்ளார். 'தீயாய் வேலை செய்தும், இப்படி, ஊத்திக்கிச்சே' என, குமாரும், அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.