"கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும்,
மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், வரும் கல்வியாண்டிலும்
நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
மாணவர்கள் குறித்த முழு விவரங்கள், தேவையான
பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்
எண்ணிக்கை, கல்வித்துறை செயல்பாடு, அதிகாரிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து
தகவல்களையும், "ஆன்-லைன்' மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்வி மேலாண்மை
தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற இணையதளம் செயல்படுத்த, மாநில அரசு
திட்டமிட்டது. 2012ல், இதற்கான பணிகள் துவங்கின.கடந்த, 2013ல், அனைத்து
தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட போதும், அதிகாரப்பூர்வமாக இயங்காமல்,
முன்னோட்டமாக மட்டுமே, இந்த இணையதளம் செயல்பட்டது. இதுதவிர, மாணவர்களின்
பெயர், போட்டோ, பெற்றோர் பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும்
"ஆன்-லைனில்' பதிவு செய்து, மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும்
பணிகளும் துவங்கின. நடப்பாண்டில் இப்பணி முடிவடைய வாய்ப்பில்லை என்று
கூறும் கல்வித்துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர
வாய்ப்பில்லை என்கின்றனர்.
அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வி மேலாண்மை
தகவல் முறை இணையதள திட்டம் என்பது, மிகப்பெரிய திட்டம். ஆசிரியர்கள் பாடம்
கற்பிக்கும் முறை, மாணவர் குறித்த முழு விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் பதிவு
செய்யப்படுகின்றன."பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான
பல்வேறு பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலும்
இத்திட்டம் நடைமுறைக்கு வருவது சந்தேகமே. மாணவர்களுக்கான "ஸ்மார்ட் கார்டு'
திட்டமும், தாமதமாகும்,' என்றனர்.