Breaking News

"பயோமெட்ரிக் முறை" தேர்ச்சி குறைவால் கல்வித்துறை முடிவு


'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

நடந்து முடிந்த, பிளஸ் 2 தேர்வில், மெட்ரிக் பள்ளிகளே மாநிலத்தில் முதல் மூன்று இடங்களையும்; மாவட்டத்தில் முதல் இடங்களையும் பிடித்தன. அரசு பள்ளி மாணவர்கள், மாவட்டங்களில் கூட முதலிடம் பிடிக்கவில்லை. இதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பள்ளிகள், 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மெட்ரிக் பள்ளிகளை (97.67) விட, 13.41 சதவீதமும்; அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை (93.42) விட, 9.16 சதவீதமும், அரசு பள்ளிகள் குறைந்துள்ளன.
அதிருப்தி:
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகள், மாநில, 'ரேங்க்' பெறாமல், பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளதால், அரசு பள்ளிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்,'ஆசிரியர்களின் கவனக்குறைவு, பள்ளிக்கு ஒழுங்காக வந்து பாடம் நடத்தாமை' போன்றவையே, இதற்கு காரணங்கள் என கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
*அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் பாடம் நடத்துவதை விட, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக, 'டியூஷன்' எடுப்பதிலேயே, அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால், பள்ளிகளில் முழுமையாக பாடம் நடத்தாமல், 'டியூஷன்' வர வைத்து, 'போர்ஷன்' முடிக்கின்றனர்; 'டியூஷன்' போக முடியாத, நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.
* பள்ளிகளில் பெயரளவில், ஒவ்வொரு நாளும் சில பக்கங்களைக் குறித்துக் கொடுத்து விட்டு, வீட்டில் படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.
கண்காணிப்பு:
*பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு,சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுகின்றனர்.தலைமை ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை.
*ஆய்வகங்களில் பெரும்பாலும், செய்முறைப் பயிற்சிக்கு வாய்ப்பு தருவதில்லை. மாறாக ஆய்வகப் பொருட்களை பயன்படுத்துவதாக, கணக்கு காட்டும் நிலைஉள்ளது.
*காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, பல பள்ளிகளில் நடத்துவதில்லை.'ரிவிஷன் டெஸ்ட்' எனப்படும், மாதாந்திர திருப்புதல் தேர்வை முறையாக வைப்பதில்லை. வாராந்திரப் பாடம் நடத்தும் தயாரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்துவதில்லை.இப்படி பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எனவே, முதற்கட்டமாக ஆசிரியர்களின் பணி வருகையை உறுதிப்படுத்தவும், 'போர்ஷன்' முடித்தல் அறிக்கை தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படும். ஆசிரியர்கள், ஓபி அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு முறை கொண்டு வரப்படும். அவ்வப்போது ஆய்வுகள் செய்து, ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.