Breaking News

அரசு கேபிள் டி.வி. மூலம் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா


அரசு கேபிள் டி.வி. மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 

கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்று  காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டையில் காதுகேளாதாவர்களுக்கான பள்ளி கட்டத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்ட 110 விதியின் கீழ் நடவடிக்க எடுக்கப்படும் மாற்று திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள் வழங்கப்படும். அரசு கேபிள் டி.வி. மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும்  சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, வடசென்னையில் மின்பற்றாக்குறையை போக்க, புதிதாக துணை மின்நிலையம் அமைக்கப்படுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வடசென்னை பகுதிகளில், மின்பற்றாக்குறை பிரச்சனையை போக்க, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

புதிதாக துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இதனிடையே, புதுக்கோட்டை கீழமஞ்சக்கரை மற்றும் வடக்குப்பட்டியில் உலர்களம் அமைக்கப்படுமா என அத்தொகுதி எம்.எல்.ஏ., தொண்டைமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 366 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், உலர் களங்கள் தேவைப்படும் இடங்களில் அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.