Breaking News

அறிவியல் போட்டிக்கு மாணவர் தேர்வு - இன்றைய தினமலர் நாளிதழில் (22.9.2015)


அறிவியல் போட்டிக்கு மாணவர் தேர்வு - இன்றைய தினமலர் நாளிதழில் (22.9.2015 காஞ்சிபுரம்:தேசிய அளவிலான, 'இன்ஸ்பயர் அவார்டு' கண்காட்சியில் கலந்து கொள்ள, காஞ்சிபுரம், பாலர்நேசன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்பாற்றலை வளர்க்க, மத்திய அரசின் சார்பில், 'இன்ஸ்பயர் அவார்டு' கண்காட்சி நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜூலை 24ம் தேதி, நடைபெற்ற, 'இன்ஸ்பயர் அவார்டு' கண்காட்சியில், 450 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், தேர்வு செய்யப்பட்ட, 35 மாணவ, மாணவியர், நாமக்கல் மாவட்டம் மகேந்திரா பொறியியல் கல்லுாரியில், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் கலந்து கொண்டனர். அதில், மாநிலம் முழுவதும், 860 பள்ளி மாணவ, மாணவியர், தங்களின் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர்.இந்த கண்காட்சியில், ஐந்து விதமான அறிவியல் தத்துவங்களில் செயல்படும், நீராவி குக்கர் எனும் பொருளை பார்வைக்கு வைத்த, உத்திரமேரூர் பாலர்நேசன் நடுநிலைப்பள்ளியில் பயிலும், 8ம் வகுப்பு மாணவர் முருகானந்தத்தின் படைப்பு, சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருடைய படைப்பிற்காக, தங்க பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அக்டோபர் மாதம் 26, 27ம் தேதிகளில், தேசிய அளவில் டில்லியில் நடைபெறும், 'இன்ஸ்பயர் அவார்டு' கண்காட்சியில் பாலர்நேசன் பள்ளி மாணவர் முருகானந்தம் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள
உள்ளனர்.