Breaking News

பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்


ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

என்.சி.டி.இ, வழிகாட்டுதலின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களை மட்டும் பி.எட். படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 2015-16 பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தும் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் பி.இ. முடித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றது.
அதன் மூலம், பி.எட். சேர்க்கைக்கு மொத்தம் விண்ணப்பித்த 7,425 பேரில், 1,136 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில், இந்தப் புதிய நடைமுறைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமானப் பதவிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.