Breaking News

குழந்தை தொழிலாளர் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கில் நேரடி உதவித்தொகை


தமிழகத்தில் விருதுநகர், கோவை உள்ளிட்ட 15 மாவட்ட குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே மாத உதவித்தொகை செலுத்தும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவங்க உள்ளது.



செங்கல்சூளை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தீப்பெட்டி ஆலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஒன்பது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை கற்றுத்தரப்படுகிறது.

வறுமையால் பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்டோரும் இதில் அடங்குவர். அவர்களுக்கு மாதம் ரூ.150 ரூபாய் உதவித்தொகையை நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் செலுத்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

விருதுநகர் மாவட்ட தேசியகுழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி,‘ இம்மாணவர்களுக்கு பொதுத்துறை வங்கியில் நாங்கள் கணக்கு துவங்கி தந்து தற்போது அதன்மூலம் உதவித்தொகை வழங்கிவருகிறோம்.

மேலும் விரைவுபடுத்த விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சென்னை, திருவண்ணாமலை, கோவை ஆகிய 15 மாவட்டங்களில் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களின் பெயர், முழு விபரங்கள், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை முழுமையாக தொகுத்து ஜூலை 1க்குள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான பணிகள் நடக்கின்றன. அதன்பின் 80 சதவீதம் வருகை பதிவு கொண்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.150, 70 சதவீதத்திற்கும் கீழுள்ள மாணவர்களுக்கு ரூ.75 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்,” என்றார்.