இலவச
பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின்
முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி
ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விருதுநகர்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வியாழக்கிழமை கூறுகையில்,
அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ,
மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், அரசு
பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும்
ஆகும்.
மேலும், நிகழாண்டில் பள்ளி
தொடங்கிய உடன் முன் கூட்டியே இலவச பயண அட்டை வழங்கவும் என
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம்
அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட இருக்கிறது.
இப்பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள்
மற்றும் கணிப்பொறி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்தாண்டு வரையில் மாணவ, மாணவிகள்
இலவச பயண அட்டைகள் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து
கழகத்தின் பணிமனை கிளை அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து
புகைப்படங்களை ஒட்டி தலைமையாசிரியர்களிடம் அளித்தும் வந்தனர். அதையடுத்து,
நேரடியாக போக்குவரத்து அலுவலகத்தில் அளித்து இலவச பயண அட்டை பெறப்பட்டு
வழங்கி வந்தனர். இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் பயண அட்டை பெறுவதில்
தாமதம் ஏற்பட்டது.
இதைத் தடுக்க பள்ளி
தொடங்கியவுடன் விரைவாக அளிக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் பெயர், முகவரி
உள்ளிட்ட முழு விவரங்களுடன் இடைப்பட்ட தூரமும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட
இருக்கிறது. மேலும், கணிப்பொறி ஆசிரியர் பதிவு செய்வதை உடனே தலைமை ஆசிரியர்
சரிபார்த்து பள்ளி மேலாண்மை தகவல் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அங்கு அனைத்து விவரங்களையும் தொகுத்து அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து
பணிமனை அலுவலகங்களுக்கு அனுப்பி இலவச பயண அட்டைகள் பெற பள்ளிக்கல்வித்துறை
ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்