Breaking News

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தீவிரப்படுத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு


திருச்சி: தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் வேலைநிறுத்த போராட்டத்தைத் தீவிரப்படுத்த சத்துணவு ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக திருச்சியில் இன்று ஆலோசனை நடக்கிறது. தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரத்திலிருந்து ரூ.3500 ஆக அதிகரிக்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை இயக்குனர் சேவியர் கிறிசோ நாயகம், வேலை நிறுத்த போராட்டத்தை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேண்டுமானால் டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிட்டு கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பழனியப்பன், கே.சி.வீரமணி, வளர்மதி தலைமையிலான குழுவினர் சத்துணவு சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சில கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்றுக்கொண்டு, முக்கிய கோரிக்கையான ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்க மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க திருச்சியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.
முதல்வர் தம்பி மிரட்டல்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 1.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் எங்கள் சங்கங்களை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்கள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மாணவர்களுக்கு உணவு தயார் செய்ய நடவடிக்கை எடுக்க அரசு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆளுங்கட்சியினர் வந்து மிரட்டி சத்துணவு ஊழியர்களிடம் சத்துணவு மைய சாவியை பறித்து சென்றுவிட்டனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி தலைவரும், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ராஜா, சத்துணவு ஊழியர்களை வரவழைத்து அமர வைத்து மிரட்டி போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என எழுதி வாங்கியுள்ளார்.
சத்துணவு மையங்களின் பூட்டையும் ஆளுங்கட்சியினர் நாளை உடைக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் மையங்களுக்கு நாளை பூட்டு போட்டு திட்டமிட்டபடி போராடுவோம்Õ என்றார்.
- See more at: http://m.dinakaran.com/Detail.asp…