ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி
விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில்
உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி
உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362
உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத்
தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
ஆனால், 'இந்த மதிப்பெண் இறுதிப் பட்டியலுக்கு
கணக்கிடப்படாது; நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணே கணக்கிடப்படும்' என, தேர்வு
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எழுத்துத் தேர்வு எதற்கு என்ற
கேள்வி எழுந்துள்ளது.தேர்வர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த வழக்கு முடியும் வரை, தேர்வு முடிவை வெளியிட முடியாத
சூழல் ஏற்பட்டுஉள்ளது.
இதற்கிடையில், எழுத்து தேர்வுக்கான விடைத்தாள்
திருத்தம் துவங்கி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 'ஓ.எம்.ஆர்., ஷீட்'
என்ற கணினிக் குறியீடு விடைத்தாள், தானியங்கி கணினி விடை திருத்த முறையில்
திருத்தப்பட்டுள்ளன. ஆனால், மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கவில்லை.
வழக்கின் முடிவுக்கு ஏற்ப, மதிப்பெண் பட்டியலிடும் பணி துவங்கும் என,
கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.