புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள
செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு
140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள்
வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த
காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார்.
இப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து
வருபவர் குட்டியப்பட்டியை சேர்ந்த இளையராஜா (வயது 35). இவர் கடந்த 2–ந்தேதி
பள்ளியில் தூக்க மாத்திரை தின்று மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள்
மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தலைமை ஆசிரியை காயத்திரி ஈஸ்வரியுடன் ஏற்பட்ட
தகராறு காரணமாக இளையராஜா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில்
நேற்று செவல்பட்டியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் பள்ளிக்கு பூட்டு
போட முயன்றனர். அதை மற்றொரு தரப்பினர் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரி (பொறுப்பு) அருமைக்கண்ணு, விராலி மலை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன்
ஆகியோர் பள்ளிக்கு சென்று பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இறுதியில் பள்ளியில் உள்ள ஒட்டு மொத்த
ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர். இதைத்
தொடர்ந்து தலைமை ஆசிரியை காயத்திரி ஈஸ்வரியை மாங்குடிக்கும், ஆசிரியைகள்
ஞானசுந்தரி, அழகுமாரி ஆகியோரை கொடும்பாளூருக்கும், ஆசிரியர் ஆரோக்கிய அருள்
தாசை சங்கம்பட்டிக்கும், ஆசிரியை லதா மகேஸ்வரியை அகரப்பட்டிக்கும் பணி
இடமாற்றம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அருமைக்கண்ணு
உத்தரவிட்டார்.
மேலும் பிரச்சினைக்கு உரிய ஆசிரியர் இளையராஜா
தற்போது மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அவர்
மருத்துவ விடுப்பில் உள்ளதாலும் அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை.
இளையராஜா மீண்டும் பணியில் சேர்ந்த பின்னர் அவரும் இடமாற்றம் செய்யப்படலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற
சம்பவத்தை அடுத்து ஒட்டு மொத்த ஆசிரியர்களும் அதிரடியாக இடமாற்றம்
செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.