Breaking News

மக்கள் தொகை பதிவேடு சரி செய்தல் பணிக்கான பயிற்சி


திருப்பூர் மாநகராட்சி மண்டலப் பகுதிகளில் தேசிய மக்கள் தொகை பதிவேடு சரி செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிசெய்தல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தலுக்கான களப் பணி ஜனவரி 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம். அசோகன் உத்தரவுப்படி, கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, அந்தந்த மண்டலப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் தலைமையில் நடைபெற்றன.


இதில், அனைத்து வீடுகளையும் கணக்கெடுப்பில் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைத்து நபர்களையும் விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். அந்தக் குடும்பத்தின் குடும்ப அட்டை எண்ணையும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் செல்லிடப்பேசி எண்ணையும் தவறில்லாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களின் ஆதார் அடையாள அட்டை, கைவிரல் பதிவு செய்த ரசீது, குடும்ப அட்டை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண்களை தயாராக வைத்திருந்து கணக்கெடுப்பு பதிவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.