Breaking News

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?


புதுடில்லி: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று, இடைக்கால தடை விதித்தது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம், 'பீட்டா' என்ற விலங்கு வதை தடுப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நேற்று, விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும்,'பெஞ்ச்'சில் இடம்பெற்றிருந்த நீதிபதி பானுமதி, தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், விசாரணையிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, எம்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய,'பெஞ்ச்' முன், இந்த மனு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது.


அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல்,'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததது சட்டவிரோதம். காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து, காளையை நீக்கியதும் சட்டவிரோதமான நடவடிக்கை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, புதிய அரசாணை பிறப்பித்துள்ளது' என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்ததில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை' என, வாதிட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி 

வாதிட்டதாவது: ஸ்பெயினில் நடக்கும் போட்டியைப் போல், இங்கு, காளைகள் வதைக்கப்படுவதுஇல்லை. காளைகளின் நலனையும் உள்ளடக்கில் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டும், சில நிபந்தனைகளை விதிக்கலாம். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளுக்கு அவசியம் என்ன உள்ளது? கடந்த சில ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெறவில்லை. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியவை, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர்.

'காளைகளுக்கு கிடைத்த வெற்றி': விலங்குகள் வதை தடுப்பு அமைப்பான, 'பீட்டா'வின் தலைமை செயல் அலுவலர் பூர்வா ஜோஷிபுரா கூறியதாவது: பீட்டா அமைப்பு துவங்கி, 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை, எங்கள் அமைப்புக்கு கிடைத்த பிறந்த


நாள் பரிசாக கருதுகிறோம். ஜல்லிக்கட்டு என்ற பெயரில், கொடூரமான சித்திரவதைக்கு ஆளாகும், காளைகளுக்கு கிடைத்த தற்காலிக வெற்றியாக, சுப்ரீம் கோர்ட்டின் தடையை கருதுகிறோம். இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, காளைகளை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மஹாராஷ்டிராவிலும் எதிர்ப்பு:
தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைப் போல், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், காளைகளை வைத்து மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பித்தது போல், மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கும் மத்திய அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.இதை எதிர்த்து, சமூக ஆர்வலர்கள் சிலர், மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்ததை அடுத்து, இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.