Breaking News

சான்றிதழைத் தர கல்வி நிறுவனங்கள் மறுக்கக் கூடாது: யுஜிசி உத்தரவு


சேர்க்கைக்குப் பிறகு வெளியேற விரும்பும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை முடக்கி வைத்தல், கட்டணத்தைத் திருப்பித் தர மறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் உயர்கல்வி நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சில உயர் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும் சேர்க்கை நடைமுறைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையைத் தொடங்கி விடுகின்றன.
 முன்கூட்டியே சேர்ந்துவிடும் மாணவர்கள், வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்து வெளியேற நினைக்கும்போது அசல் கல்விச் சான்றிதழ்கள், கல்விக் கட்டணத்தை திரும்பத்தர கல்லூரிகள் மறுப்பதாகப் புகார்கள் வருகின்றன. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.
 அசல் கல்விச் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் முடக்கி வைக்கக் கூடாது. மேலும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன் வெளியேற நினைக்கும் மாணவர்களிடம், கல்விக் கட்டணத்தில் சேர்க்கை நடைமுறை கட்டணமாக அதிகபட்சம் ரூ.1000 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.
 இதுதொடர்பான புகார்கள் பெறப்படுமானால், தீவிரமாக நடைமுறைப்படுத்தவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் யுஜிசி மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.