Breaking News

தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு;15 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதார பிரச்னையை பேச மறுத்து ஊழியர் சங்க நிர்வாகிகளை 4 மணிநேரம் தவிக்கவிட்ட தலைமை செயலாளர்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகும். இதன் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் 

அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் 10 பேர் நேற்று காலை 11 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுக்க தலைமை செயலகம் வந்தனர். ஆனால் அவர்களை பார்க்க தலைமை செயலாளர் மறுத்து விட்டார். ஆனால், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், தங்களை அவர் சந்திக்க மறுத்தால் அவரது அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று உதவியாளரிடம் கூறினர். இதையடுத்து, தலைமை செயலாளர் ஞானதேசிகன், அரசு சங்க பிரதிநிதிகளின் விசிட்டிங் கார்டை பெற்றுக் கொண்டு, காத்திருக்குமாறு கூறினார். 

பிற்பகல் 1 மணி வரை அழைக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் அங்கிருந்த புறப்பட்டு, தலைமை செயலகத்தின் 2வது மாடியில் இருந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றனர். அங்கும் சுமார் ஒரு மணி நேரம் காத்து இருந்தனர். பின்னர் அமைச்சர் 2.30 மணிக்கு வீட்டுக்கு செல்லும்போது, அரசு சங்க நிர்வாகிகள் மனுவை அமைச்சரிடம் வழங்கினர். அமைச்சரும், “வழக்கம்போல் முதல்வரிடம் உங்கள் கோரிக்கையை தெரிவிக்கிறேன்” என்று கூறி சென்றார். பின்னர் ஒருவழியாக பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து அரசு ஊழியர்களின் 60 அம்ச கோரிக்கை மனுவை அளித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 8ம் தேதி சென்னை, சேப்பாக்கத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்’’ என்றும் கூறினர்.

பின்னர் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மாநில தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களது பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. தமிழக அரசு பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அதிகாரிகளிடம் எங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளோம். பலமுறை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியுள்ளோம். 

முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அங்கீகரிகப்பட்ட சங்கங்களை அழைத்து பேசுவோம் என்பது உள்பட பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் ஒருமுறைகூட எங்களை அழைத்து பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது. தொழில்வரி ரத்து, பணிநிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை” என்று அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.