Breaking News

நவ.9-ல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை


தீபாவளிக்கு முதல் நாள் நவ.9ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டணியின் நாமக்கல் மாவட்டப் பொருளாளர் து.ராமராசு மாநில தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 9-ஆம் தேதி அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் 34,515 தொடக்கப்பள்ளிகள், 9,935 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில்  பணியாற்றி வருகின்றனர்.

வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்காக, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாடை எடுப்பது, இனிப்பு வகைகள் தயாரிப்பது, சுவாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்குச் செல்வது என தீபாவளி பண்டிகைக்கு முன் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டிஉள்ளது.

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்நிலையில் நவம்பர் 9-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதால் தீபாவளி ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளப் போதிய நேரம் இல்லை.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தீபாவளி ஆயத்தப்பணியை மேற்கொள்வதற்கு வசதியாக நவம்பர் 9-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விட வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமையாசிரியர்கள்  நவம்பர் 9-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.

அனைத்துப் பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை விடுவதற்கான அதிகாரம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இல்லை என்பதால் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பாதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டு மீதி செயல்பட்டாலும் மாணவர்கள் வருகை மிக குறைவாகவே இருக்கும்.

அதனால் பள்ளி வேலைநாள் கணக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் வெளியூரில் இருந்து இம்மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர், மாணவர்கள் முன்கூட்டியே அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வருவதில் சிரமம் ஏற்படாது

எனவே, பல்வேறு தரப்பினரின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நவம்பர் 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட வேண்டும்.