Breaking News

'ராணுவ பட்ஜெட்டை குறைத்தால் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க முடியும்


புதுடில்லி:''வெளிநாடுகளில் இருந்து, பெருமளவில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்கிறோம். இதை தவிர்த்து, உள்நாட்டிலேயே தளவாடங்களை தயாரித்தால், ராணுவத்துக்கு செலவிடும் தொகையில், 50 சதவீதத்தை குறைத்து, கல்வித் துறைக்கு அந்த தொகையை செலவிட முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 


இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் இந்திய அறிவியல் பயிற்சி மையமான, ஐ.ஐ.எஸ்., ஆகியவை இணைந்து, 'இம்பிரின்ட் இந்தியா' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக உள்நாட்டிலேயே ஆய்வு செய்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் துவக்க விழா, நேற்று டில்லியில் நடந்தது. இதன் முதல் அறிக்கையை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். 

இந்த விழாவில் பிரதமர் பேசியதாவது:

ராணுவ தளவாடங் களுக்கு, வெளிநாடுகளையே அதிகம் சார்ந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தளவாடங்களை இறக்குமதி செய்கிறோம். இதற்கு, பெரிய அளவில் செலவிட வேண்டியுள்ளது. ராணுவ தளவாடங்களை, தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டிலேயே தளவாடங்களை தயாரித்தால், அடுத்த, 10 ஆண்டுகளில், பட்ஜெட்டில் ராணுவத்துக்காக ஒதுக்கப்படும், 50 சதவீதத்தை குறைக்க முடியும். இந்த தொகையை, கல்வித் துறை வளர்ச்சிக்கு ஒதுக்கலாம். 

புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் ஊக்குவிப்பதன் மூலம், இதை சாத்தியமாக்க முடியும். இதற்காகவே, 'இம்பிரின்ட் இந்தியா' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிப்பதன் மூலம், நமக்கு தன்னிறைவு ஏற்படுவதுடன், நம் நாடும், உலகளா விய சந்தையாக மாறும். தற்போதைய சமூகம், தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறி வருகிறது. எனவே, செலவினங்களை தாங்க கூடிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டியது, மிகவும் தவிர்க்க முடியாத விஷயம்.

தொழில்நுட்பங்கங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் வரை, நமக்கான பிரச்னைகள் நீடிக்கும். அறிவியல் என்பது, உலகளாவிய ஒரு விஷயம். ஆனால், தொழில்நுட்பம் என்பது உள்நாட்டை சார்ந்த விஷயம்; இதுதான் நமக்கு தற்போது தேவை. 

ஒருவருக்கு, ஆரம்ப கல்வியும், உயர்நிலை கல்வியும் மிகவும் முக்கியமானது. ஆரம்ப கல்வி, ஒருவரின் குணத்தை வளர்க்க உதவுகிறது. அதேநேரத்தில், ஆரம்ப கல்வி தான், ஒருவர், உச்சநிலையை அடைய உதவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.