அனைத்து பள்ளிகளிலும், காலையில் நடக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில், மழை வேண்டி வழிபாடு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.
தினமும் பள்ளியில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து, செய்திகள், பள்ளி நிகழ்வுகள், தேசிய உறுதிமொழி உள்ளிட்டவை நடைபெறும். இதில், மழை பொழிய வேண்டும் என இயற்கையை வேண்டும் வகையில், 'மழை வாழ்த்து' பாட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுநலம் கருதி, மக்கள் மழைக்காகபிரார்த்தனை செய்கின்றனர். மாணவர்களிடையே பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையை வேண்டி மழை பொழிந்தால்தான், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பினால்தான் நீர் வரத்துபெருகும் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.
'மழை வேண்டி பிரார்த்திப்போம்,
மழை நீரை சேமிப்போம்,
ஏரி கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பி வழிய,மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!'
என்ற மழை வாழ்த்தை, தினமும் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மழை பொழிய வேண்டும் எனில், மரங்கள் நிறைய நடவும், இயற்கை சூழலை கெடாமல், பாதுகாக்கவும் வேண்டும் என்பது அறிவியல் காரணம். இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தாமல், மழை வேண்டிய தினமும் பிரார்த்தனை செய்வோம் என்பது ஏற்க முடியாதது. காடுகளையும், இயற்கை சூழலையும், அழித்துக்கொண்டு, மழை வாழ்த்தை பாடினால் மழை வருமா என்ற மாணவர்களின்கேள்விக்கு, பதில் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.