கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்களை பறிகொடுத்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் பருவமழை கொட்டி தீர்த்தது.
அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 400 கிராமங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கனமழைக்கு இதுவரை கடலூரில் 55பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதில் 15 ேபர் பள்ளி மாணவ, மாணவிகள். திடீர் வெள்ளத்தில் சிக்கிய மாணவ, மாணவிகள் தங்கள் உடமைகள், பாட புத்தகங்களை பறிகொடுத்து விட்டு பெற்றோருடன் ஓடி உயிர் தப்பினர். பலர் பாட புத்தகங்களை எடுத்து சென்றபோது மழையில் நனைந்து வீணாகின. சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச கணினிகளும் சேதமடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழையால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது. விழுப்புரத்தில் கிராமங்கள் துண்டிப்பு: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கல்படை ஆற்று பாலத்தில் நேற்றுமுன்தினம் மாலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அவ்வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளம் காரணமாக மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம், மாயம்பாடி, பொட்டியம் ஆகிய 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.