Breaking News

"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி'கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்


பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.


ஆறு வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமான இந்தக் கொள்கையால், மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத் தேர்வுகளை தீவிரமாகக் கருதுவதில்லை; இதனால், அவர்களின் கல்வித் தரம் குறைவதுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன.

இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை தொடர்பாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது. இதுதொடர்பாக, அந்த அமைச்சக வட்டாரங்கள், தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளன.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இந்தக் கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தெரிவித்துள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.