கோவை மாநகரில் வகுப்பறையில் செல்லிடப்பேசி பயன்படுத்திய மாணவியை ஆசிரியர் அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து, புதன்கிழமை மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை ராம் நகர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 12-ஆம் வகுப்பில் பயிலும் 5 மாணவிகள், செவ்வாய்க்கிழமை பாட வேளையின்போது செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்த வகுப்பு ஆசிரியர், இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் நிர்மலா தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவிகளை வரவழைத்த அவர், 4 பேரிடம் இருந்த செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளார். தர மறுத்த ஒரு மாணவியை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் புதன்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாநகராட்சி கல்வி அலுவலர் ரவி உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர். வகுப்பறையில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்று கல்வித் துறையின் உத்தரவு இருப்பது குறித்து பெற்றோருக்கு உணர்த்தப்பட்டது.
மேலும் 5 மாணவிகளையும் வரவழைத்த அதிகாரிகள் இனி பள்ளியில் செல்லிடப்பேசியை பயன்படுத்த மாட்டோம் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கும்படி வலியுறுத்தினர்.
அவர்கள் கடிதம் கொடுத்ததை அடுத்து செல்லிடப்பேசிகள் திருப்பி அளிக்கப்பட்டன. இதையடுத்து சமாதானம் அடைந்த மாணவியின் பெற்றோர் திரும்பிச் சென்றனர்.