சென்னை;'வருவாய் துறையில் காலியாக உள்ள, 813 கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, பிப்., 14ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வௌியிட்ட அறிவிப்பு:வி.ஏ.ஓ., பதவிக்கான, 813 காலியிடங்களை நிரப்ப, பிப்., 14ல் எழுத்து தேர்வு நடக்கும். இதற்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில், டிச., 14 வரை விண்ணப்பிக்கலாம்; தேர்வு கட்டணத்தை, டிச., 16க்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர் பதிவு கட்டணமாக, 50 ரூபாய் செலுத்தி, தங்களின் அடிப்படை விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் கட்டாயம் நிரந்தர பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே, தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வை எழுதலாம்; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, 20 சதவீத இடங்கள் நிரப்பப்படும்.
மாவட்ட வாரியான காலியிடங்களில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 100 இடங்கள் உள்ளன. கன்னியாகுமரி, சென்னை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், தலா, ஒரு இடம் மட்டும் உள்ளன; சேலம் மாவட்டத்தில் காலியிடம் இல்லை.