நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள், தலைவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 3 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நடத்தவுள்ளார்.
இந்த மாநாடு தில்லியில், வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காகவும், இந்தியக் கல்வி நிறுவனங்களை, உலகின் முன்னணி கல்வி நிறுவனமாகக் கொண்டு வருவதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாரத ரத்னா விருதுபெற்ற பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களை ஒருசேர அழைத்து குடியரசுத் தலைவர் கூட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு, மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்ஐடி), இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி, ஆய்வு நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) ஆகிய கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.