Breaking News

நவ. 8-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


தமிழகம் முழுவதும் 387 தேர்வு மையங்களில் நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வை (என்.டி.எஸ்.இ.) 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.8) நடைபெறுகிறது.
 பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
 முதல் கட்டமாக மாநில அளவிலும், அடுத்த கட்டமாக அகில இந்திய அளவிலும் இந்தத் தேர்வு நடத்தப்படும். 

 தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான மாதாந்திர கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவித்தன.
 இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 தேசிய திறனாய்வுத் தேர்வில் 6,766 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
 இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து தலைமை ஆசிரியர், முதல்வர் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இதுவரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறாத மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், முதல்வரை உடனே அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.
 இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. "மேட்' எனப்படும் முதல் தாள் நவம்பர் 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும், "சாட்' எனப்படும் இரண்டாம் தாள் அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறும்.
 "மேட்' என்பது "மென்டல் எபிலிட்டி டெஸ்ட்', "சாட்' என்பது "ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்' ஆகும்.
 தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வர வேண்டும். 
 மாணவர்களின் நலன் கருதி, கடந்த ஆண்டு தேசிய திறனாய்வுக்கான "மேட்', "சாட்' வினாத்தாள்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.