சென்னை:'அரபிக் கடலில், கேரளா அருகிலும்; வங்கக் கடலில், அந்த மான் கடல் பகுதியிலும், இரண்டு காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், அடுத்த இரு நாட்களில், தமிழகத்தில் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:கேரளாவுக்கு அருகே, அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், நாளை கனமழையும், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில், அந்த மான் கடல் பகுதியில், உருவாகி உள்ள காற்று அழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால், 14ம் தேதி முதல், சென்னை, புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யலாம். ஆனால், இந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், கன மழை பெய்ய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.நேற்று காலை, 8:30 மணி வரை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செய்யூரில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பெய்துள்ளது. அரக்கோணம் - 9; மதுராந்தகம் - 8; சென்னை விமான நிலையம், திருவையாறு, ஒட்டன்சத்திரம் - 7; தாம்பரம், நுங்கம்பாக்கம், செங்கல்பட்டு - 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வங்கக் கடலில், கடந்த வாரம் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலையால், கடலுார், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.தற்போது, அரபிக்கடல், வங்கக்கடல் என, இரு பகுதிகளிலும், குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், 14ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.