Breaking News

பள்ளியில் மது அருந்திய 4 மாணவியர் 'டிஸ்மிஸ்


நாமக்கல்: பள்ளி வகுப்பறையில் பிறந்த நாள் விருந்து கொண்டாடிய அரசு பள்ளி மாணவியர், குளிர்பானத்தில் மது கலந்து குடித்து, 
போதையில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, பள்ளி தலைமையாசிரியை 'டிசி' வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். 


தமிழகத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழைகாரணமாக, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், 21ம் தேதி நடத்தப்பட்டது. திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர், திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.விசாரணையில், அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.மாணவி ஒருவரின் பிறந்த நாளுக்கு, 'குவார்ட்டர் மதுவும், பிரியாணியும் வேண்டும்' என, சக தோழியர் கேட்டுள்ளனர். அதை தொடர்ந்து, அவர், தோழியருக்கு மது விருந்து அளித்துள்ளார்.அதற்காக, பள்ளிக்கு காலை, 8:30 மணிக்கே வந்துள்ளனர். அங்கு, வகுப்பறையில் குளிர்பானத்தில் பிராந்தி கலந்து குடித்து உள்ளனர்.அதன்பின் நடந்த தேர்வில் பங்கேற்றனர் தேர்வறையில், நான்கு மாணவியரும் வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தனர்.சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, 'டிசி' கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.பள்ளி மாணவியர், வகுப்பறையில் மது அருந்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் முதன்மை கல்வி அதிகாரி, தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் கலெக்டர் தட்சிணாமூர்த்தி விசாரணை நடத்தினார்.


அதை தொடர்ந்து, அவர் கூறியதாவது:திருச்செங்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விவகாரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.மாணவி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பார்ட்டி கொடுக்கப் பட்டுள்ளது. அதில், குளிர்பானத்தில் மது கலந்து குடித்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட, நான்கு மாணவியருக்கும், தலைமையாசிரியை, 'டிசி' வழங்கி உள்ளார்.தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை இருக்க வேண்டும். இது போன்ற பிரச்னை வரும்போது, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனை பெற்று, அதன் பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக விசாரணைநடத்த, சி.இ.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களும் கிடைத்ததும், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரின் இந்த பதில், மற்ற பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவர்கள் கூறுகையில்,'கோவை மாணவி ஒருவர், ஒரு காரணம் கூறி, மது அருந்திய விவகாரம், மக்கள் மனதை விட்டு அகலாத நிலையில், பள்ளியிலேயே மாணவியர் மது அருந்தியதற்கு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், கலெக்டர் இப்படி மெத்தனமாக இருக்கிறாரே...' என்றனர்