Breaking News

7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் மிகவும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முதல் நிலை ஊழியர்கள் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களுக்கும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் சம்பள வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது.

அதாவது கீழ்நிலை ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விட உச்சநிலையில் உள்ள ஊழியர்கள் பல மடங்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே கீழ்நிலை ஊழியர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

ஆனால் 7–வது சம்பள கமிஷனில் மேல்நிலை அதிகாரிகளுக்கு இப்போது அதிக சம்பள உயர்வுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. உச்ச நிலையில் உள்ள ஊழியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் கீழ்நிலை ஊழியர்களுக்கு 17 சதவீதம் மட்டுமே கூடுதலாக அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

கேபினட் செயலாளர் ஒருவருக்கு தற்போது ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் சம்பளம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரூ.2½ லட்சம் சம்பளம் வழங்க சிபாரிசு செய்துள்ளனர். செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் கூடுதலாகும்.

கூடுதல் செயலாளராக இருக்கும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. அது ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள ஊழியருக்கு ரூ.15 ஆயிரத்து 330 சம்பளம் வழங்கப்படுகிறது. அது 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 17.4 சதவீதம் மட்டுமே கூடுதலாக சம்பளம் கிடைக்கும். இதே போல கீழ்நிலை ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அலவன்ஸ்சுகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு கீழ்நிலை ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.