Breaking News

தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 2010 முதல் ஆண்டுதோறும், தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, தமிழகத்தில் இதுவரை, ஐந்து ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.கடந்த, 2014 - 15ம் ஆண்டிற்கான விருதுக்கு, தமிழகம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அரியானா, ம.பி., மற்றும் டில்லி மாநிலங்களின், ஒன்பது ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அன்பழகன், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான, அடுத்த மாதம், 5ம் தேதி, டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்படும்.
எளிய பொருட்கள் மூலம் அறிவியல் மாதிரிகளை எவ்வாறு செய்வது என்ற செயல் முறையை, மற்ற மாவட்ட மாணவர்களுக்கு, 'ஆன்-லைனில்' செய்து காட்டியதற்காக விருது வழங்கப்படுகிறது.ஆசிரியர் அன்பழகன், ஏற்கனவே மாநில அளவிலும், தேசிய அளவிலும், 'மைக்ரோசாப்ட் நிறுவன விருதையும் பெற்றுள்ளார். 2013ல், ஜப்பானில் நடந்த, கணித பாடத்திட்ட வடிவமைப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, பயிற்சி பெற்றுள்ளார்.