Breaking News

பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.


பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டத்தில், 'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மன்றங்கள் துவங்கப்படுகின்றன. இவ்வாறு, துவங்கப்படும் மன்றங்கள், ஒன்று அல்லது, இரண்டு மாதங்கள் வரை செயல்படுகின்றன. காலப்போக்கில், தேர்ச்சி விகிதம் என்ற போர்வையில் அனைத்து மன்றங்களும் முடக்கப்படுகின்றன. சில பள்ளிகளில், ஒரு சில ஆசிரியர்களின் ஆர்வத்தின்படி,
செயல்பாடுகளை தொடர்ந்தாலும், நிதி ஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்காததால், மன்றங்கள் பெயரளவில் உள்ளது. கடந்த, 2002ம் ஆண்டு முதல், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய, ஐந்து மன்றங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டம் தாண்டிய அறிவை மேம்படுத்தும் நோக்கில், செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இம்மன்றங்கள் செயல்பாட்டில் இருந்தது என்ற சுவடுகளே இல்லாமல் போய்விட்டது. மேலும், கலை இலக்கிய மன்றம், நாடக மன்றம், நுகர்வோர் மன்றம், நலமைய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், என பத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் துவக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்தது. தற்போது, சுற்றுசூழல் மன்றங்கள் தவிர, பிற மன்றங்கள் முடங்கியுள்ளன. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களின் மீது பணிசுமைகளை திணிப்பதாலும், நிதியின்மையாலும் இதுபோன்ற மன்றங்கள் செயல்படுவதில்லை. இந்நிலையில், தற்போது மாணவர்களின் வளர் இளம் பருவ பிரச்னைகளை தீர்க்கும் வகையில் 'குமரபருவ மன்றம்' , 'கலை இலக்கிய பண்பாடு மன்றம்' புதிதாக துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 10 லட்சம் ரூபாய் நிதியை மாநில அரசுக்கு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரபருவ மன்றத்துக்கு வரவேற்பு கல்வியாளர் பாரதி கூறுகையில், ''மன்றங்கள் என்பது மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்த பயன்பட வேண்டும். பெயரளவில் மன்றங்கள் துவங்க அறிவிக்கும் அரசு, அதை கண்டுகொள்வதில்லை. கலை இலக்கிய பண்பாடு மன்றம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பெயரளவில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் உத்தரவு என்பதாலும், நிதி கிடைக்கும் என்பதாலும், அதே பெயரில் அதே செயல்பாடுகளுடன் மன்றங்கள் துவங்க உத்தரவிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. மாணவர்களின் வளர் இளம் பருவ பிரச்னைகளை போக்கும் நோக்கில் துவங்கப்படவுள்ள, 'குமரபருவ மன்றம்' வரவேற்புக்கு உரியது,'' என்றார்.