Breaking News

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை:மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி, அவர்களின் பணிக்காலம் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வூதியதாரர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கென தனி அடையாள அட்டை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்த மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:அனைத்து துறையை சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கும், கட்டாயம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டையில் இடம் பெற வேண்டிய பொதுவான அம்சங்களுடன், 12 இலக்க ஆதார் எண்ணும் இடம் பெற வேண்டும். அதில் இடம் பெறும் விவரங்கள் 'பிரின்ட்' செய்யப்பட்டிருக்க வேண்டும், கையால் எழுதப்பட்டிருக்கக் கூடாது. இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஓய்வு பெற்ற, 50 லட்சம் பேர், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்