கல்வி உதவித்தொகை, சீருடை, லேப் - டாப் போன்ற அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின், ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.
மத்திய, மாநில அரசு கள் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும், நலத்திட்டங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கையும், பல நேரங்களில் முரண்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, மாணவர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு பள்ளி களில் சேரும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புறப் பள்ளி மாணவர்களில் பலர், வேறு ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் போது, அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல், வேறு பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். முந்தைய பள்ளியில், அந்த மாணவரின் பெயர் நீக்கப்படாமல், 'ஆப்சென்ட்' அல்லது இடைநிற்றலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், அரசின் திட்டங்களைத் திட்டமிடுவதில், பள்ளிக்கல்வித் துறைக்கு பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் ஆதார் எண்களை, பள்ளி யின் பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 'கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், மாணவர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஊர், தாலுகா, மாவட்டம், தொடக்கக் கல்வி அல்லது ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வகுப்பு ஆகிய விவரங்களுடன், மாணவனின் ஆதார் எண்ணும் இணைத்து, கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மாணவர் பெயர் இருப்பதை, தனி மென்பொருள் மூலம் கண்டுபிடித்து நீக்கி விட முடியும்.
* 1 - 10ம் வகுப்பு வரை சத்துணவு, இலவச காலணி
* ஒன்றாம் வகுப்புக்கு இலவச சிலேட்
* பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
* சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு, 1 - 8ம் வகுப்பு வரை இலவச புத்தகம்
* எட்டாம் வகுப்பு வரை இலவச சீருடை
* பிளஸ் 1, பிளஸ் 2 பட்டியலின மாணவியருக்கு இலவச சைக்கிள்
* இடைநிற்றல் மாணவர்களுக்கு, பள்ளிமுறை இல்லாக் கல்வி
* பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப்
* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை
* மலைப் பகுதி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்
* 1 - 10ம் வகுப்பு வரை இலவச நோட்டுப் புத்தகம்
* பிளஸ் 2 வரை புத்தகப்பை, ஜாமெட்ரி பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், உலக வரைபடப் புத்தகம்.