Breaking News

மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு ?


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.மார்ச் 31–ந்தேதி வரை நடக்கும் இந்த தேர்வை 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதி வருகின்றனர். 

தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.நாளை மறுநாள் (புதன்கிழமை) கணித தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்வு ஒரு பிறம் நடைபெற்று வந்தாலும் கூட விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கி விட்டன.தமிழகம் முழுவதும் 63 கல்வி மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.தமிழ் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. முதன்மை தேர்வாளர் தலைமையில் கொண்ட குழுக்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் காப்பு மையத்தில் இருந்து கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டன.விடைத்தாள்கள் திருத்தும் பணியில் கவனமாகவும், தவறுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் 4 மையங்களில் விடைத்தாள் திருத்தும்பணி நடைபெற்று வருகின்றன. சென்னை வடக்கு கல்வி மாவட்ட விடைத்தாள்கள் அண்ணா நகர் ஜெசிமோசஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சென்னை தெற்கு கல்வி மாவட்ட விடைத்தாள்கள் அசோக் நகர் கே.கே. நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் திருத்தம் செய்யும்பணி நடக்கிறது.சி.எஸ்.ஐ. செயிண்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் சென்னை மத்திய கல்வி மாவட்டவிடைத்தாள்களும், முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை கிழக்கு கல்வி மாவட்ட விடைத்தாள்களும் திருத்தப்படுகின்றன.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12–ந்தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து மதிப்பெண்கள் டேட்டா எண்ட்ரி மூலம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது.மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி 20 முதல் 25 நாட்கள் வரை நடைபெறும். இதையடுத்து தேர்வு முடிவுகள் தயார் நிலைக்கு வருகிறது. மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அனுமதி பெற்று எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியிடுவது என்பது குறித்து இறுதி செய்யப்படும். அதன் பின்னர் தேதி அறிவிக்கப்படும்.கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்–2 தேர்வு முடிவுகள் மே 10–ந்தேதிக்குள் வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் மே 9–ந்தேதி தேர்வு முடிவு வெளியானது.
இந்த ஆண்டும் அதே போல வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு தயாராகி விடும். எந்த தேதியில் வெளியிடப்படும் என்பதை அரசு முடிவு செய்யும். ஒரு சில ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்திலேயே வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடமும் தாமதம் இல்லாமல் பிழை மற்றும் குழப்பமின்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.மேலும் இந்த வருடம் பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதிதாக வழங்கப்படுகிறது.
தேர்வு முடிவு வந்த 2 நாட்களில் இதனைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வியில் சேர கால தாமதம் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை அரசு தேர்வுத்துறை செய்துள்ளது.