Breaking News

ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாள் பகிர்வு: 4 பேர் கைது

ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சில தனியார் பள்ளிகளே தங்கள் மாணவர்களுக்கு தேர்வில் உதவுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் பள்ளி ஒன்றில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, "பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன் தினம் கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஓசூர் தனியார் பள்ளியில் ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் தேர்வெழுத வேண்டிய மாணவர்களில் ஒருவர் வரவில்லை. இந்நிலையில் அந்த அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் தேர்வுக்கு வராத மாணவனின் வினாத்தாளில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகளை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து மற்றொரு ஆசிரியர் உதயகுமாருக்கு அனுப்பியுள்ளார். அந்நேரம், பறக்கும் படையினர் அறைக்குள் நுழைந்துள்ளனர். ஆசிரியர் மகேந்திரனிடம் இருந்து செல்போனை கைப்பற்றினர். உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன, கார்த்திகேயன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் மற்றொரு ஆசிரியருக்கு கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களைப் பெற்று மாணவர்களுக்கு தெரிவிக்கவே அவ்வாறு செய்ததாக கைதான ஆசிரியர்கள் கூறினர்" என தெரிவித்தனர்.