Breaking News

ஓட்டை, உடைசல் பள்ளிகள் கணக்கெடுப்பு?


பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை, உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில், தமிழகத்தில், மூன்று அரசு பள்ளிகளின் சுவர் இடிந்து விழுந்து, விபத்துகள் நிகழ்ந்துள்ளன.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில், எம்.புதுப்பட்டியில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்த விபத்தில், ஐந்து மாணவ, மாணவியர்காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில், வட அகரம் பகுதியில், பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், அலங்கார வளைவு சுவர் இடிந்ததில், ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானான்.சென்னை, பெருங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது மாணவ, மாணவியர் வகுப்பறையில் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.இந்த தொடர் விபத்துகளால், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பள்ளிகளில் கட்டட சுவர்களில் சேதம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும், தற்போது, ஊடகங்களில் செய்தியாவதால், பிரச்னையை சரிசெய்ய முடிவெடுத்துஉள்ளனர்.இதன் முதற்கட்டமாக, தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் ஓட்டை, உடைசலாக இருக்கும் பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மோசமான கட்டடங்களின் பட்டியல்வந்தவுடன் பட்ஜெட்டில், மானியக் கோரிக்கை அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அவற்றை பராமரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன