Breaking News

சட்டப்பேரவை நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது:


தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (மார்ச் 25) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் வரும் நிதியாண்டுக்கான (2015-16) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரவுகள் அதிகரித்தாலும், செலவுகளும் மிகையளவு கூடும் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நிகழ் நிதியாண்டைக் காட்டிலும் வரும் நிதியாண்டில் (2015-16) வருவாய் வரவுகள் ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தாலும் செலவுகளின் அளவு அதற்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் வருவாய் வரவுகள், ரூ.1.27 லட்சம் கோடிக்கு அதிகமாக இருந்தாலும், செலவுகளின் அளவு அதை விடக் குறைவாக இருந்ததால், வருவாயில் உபரி ஏற்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வருகிற 25-ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
இதற்காக, சட்டப்பேரவை காலை 10 மணிக்குக் கூடுகிறது. நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்த பிறகு, அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.எத்தனை நாள்கள் நடைபெறும்? சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்க, பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம், வரும் புதன்கிழமை நண்பகல் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்தக் கூட்டம் நடக்கிறது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
 பேரவை கூட்டத் தொடர் வரும் சனிக்கிழமையும் (மார்ச் 28) நடைபெறுகிறது. அதற்குப் பிறகு 30 அல்லது 31 வரை கூட்டத் தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.துறை ரீதியான செலவுகள்: அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான செலவுகளுக்கு நிதியை ஒதுக்குவதற்கு மானியக் கோரிக்கை மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறும். துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற, பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்தும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.வரவுகளும்- செலவுகளும்: நிகழ் நிதியாண்டுக்கான (2014-15) நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை ரூ.289.36 கோடிக்கு வருவாய் உபரியாக இருந்தது. வருவாய் வரவுகள் ரூ.1,27,389.83 கோடியாகவும், செலவுகள் 1,27,100.47 கோடியாகவும் இருந்தது.வரும் நிதியாண்டில் (2015-16) தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகள் ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தாலும், செலவுகள் ரூ.1.54 லட்சம் கோடியாக இருக்க வாய்ப்பிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பளங்களுக்காக ரூ.40,721.78 கோடியையும், ஓய்வூதியத்துக்காக ரூ.18,583.93 கோடியையும் செலவிட நேரிடும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த வருவாய் வரவுகளில் 40 சதவீதத்துக்கு அதிகமாகும்.தமிழகத்தின் கடன் சுமையானது, 13-ஆவது நிதிக் குழு வகுத்தளித்துள்ள விதியின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு 25 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளதாக நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிகழ் நிதியாண்டில், கடன் அளவு 18.91 சதவீதமாக இருப்பதாகவும், இதன் அளவு வரும் நிதியாண்டில் சிறிது மட்டுமே அதிகரிக்கும் எனவும் நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பரபரப்பு நிறைந்த கூட்டம்: பேரவைக் கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பிருப்பதால் இந்தக் கூட்டத் தொடர் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்.