Breaking News

மற்றவா் பணத்தை மாற்றித்தர உதவுபவருக்கு 7 ஆண்டுகள் சிறை : வருமான வரித்துறை கடும் எச்சரிக்‍கை....!!!

கணக்கில் வராத, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மக்கள் அடுத்தவர் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தால், பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அபராதம், விசாரணை மற்றும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை வித்துள்ளது.

பினாமி சொத்து பரிமாற்றச் சட்டம் கடந்த 1-ந்தேதி நடைமுறைக்கு வந்துள்ளதால், அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாடுமுழுவதும் வருமான வரித்துறையினர் சமீபத்தில் மேற்கொண்ட 80 சர்வேகள், மற்றும் 30 தேடுதல் வேட்டையில், கணக்கில் கொண்டு வரப்படாத ரூ.200 கோடி இருப்பதைக் கண்டுபிடித்தது. மேலும், பிரதமர் மோடி செல்லாத ரூபாய் நோட்டு குறித்து அறிவிப்பு வெளியானபின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்ட திடீர் ரெய்டுகளால் இதுவரை ரூ.50 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்க ரூ.1000, ரூ500 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின், மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ1000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதிலும் கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்தது. பலர் கருப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவி புரிகிறார்கள், ஜன்தன் வங்கிக்கணக்கை தவறாகப் பயன்படுத்தி, கருப்பு பணம் டெபாசிட் செய்து வெள்ளையாக மாற்ற உதவுகிறார்கள் என மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரூ.500, ரூ1000 நோட்டுகளை வங்கியில் மாற்ற வங்கிக்கணக்கு இல்லாதவர்களின் கையில் மை வைக்கப்பட்டது, மேலும், பணம் எடுக்கும் அளவும் ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த அதிரடியாக அடுத்தவர் வங்கிக்கணக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லாத, வருமானத்துக்கு சம்பந்தம் இல்லாத, செல்லாத ரூபாய் நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாடுமுழுவதும் கடந்த 8-ந்தேதிக்கு பின், தனிநபர் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட கணக்குகளை வருமான வரித்துறையினர் அடையாளம் கண்டு வருகின்றனர்.
அப்படி வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வரும் வங்கிக்கணக்குகளில், அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டது உண்மை எனத் தெரியவந்தால், பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும். இது அசையும் சொத்து, அசையா சொத்து பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் பொருந்தும்.
மேலும், அவ்வாறு வங்கிகணக்கில் சட்டவிரோதமாக, வருமானத்துக்கு தொடர்பில்லாத, அதிகமான பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தாலோ, அல்லது சொத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தாலோ அதை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருமான வரித்துறைக்கு உண்டு.
மேலும், வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் மற்றும் சட்டவிரோத பண டெபாசிட்டை தங்கள் வங்கிக்கணக்கில் ஏற்றுக் கொள்ளும் ஆண் மற்றும் பெண் ஆகியோரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ அரசு செல்லாததாக அறிவித்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்தி, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற, மற்றவர்கள் கணக்கில் யார் டெபாசிட் செய்கிறார்கள் என்பதையும், அனைத்து வங்கிப் பரிமாற்றங்களையும் தீவிரமாக கண்காணிக்க வருமான வரித்துறையினரை மத்திய நேர்முக வரிகள் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுபோல் பல நகரங்களில் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கில் டெபாசிட் செய்ததவர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கின்றன.
இது குறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அரசு நிர்ணயித்துள்ள அளவான ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களை கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம், நிர்ணயிக்கப்பட்ட அளவு பணத்துக்கு கீழ், சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் டெபாசிட் செய்திருந்தால், அது குறித்து வங்கிகள் அல்லது வருவாய் புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல் கிடைத்தால் அவர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்படும்.
பினாமி பரிமாற்றம்
கருப்பு பணம் வைத்து இருப்போருடன் ஒரு சாமானியர் ஒப்பந்தம் செய்து கொண்டு, தன்னுடைய வங்கிக்கணக்கில் அவரின் ரூ.500, ரூ1000 நோட்டுகள் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து, வெள்ளையாக மாற்றிக் கொடுக்கலாம். இந்த பரிமாற்றத்துக்கு பினாமி பரிமாற்றம் என்று பெயர்.
ஒருவர் வங்கிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்தால் பலனடையும் நபர் என்றும், டெபாசிட் செய்த பணத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்றவர் பினாமிதார்.
இந்த பினாமிதார், பலனடையும் நபர் அல்லது பினாமி பரிமாற்றத்துக்கு தூண்டியவர் ஆகியோரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வழி செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.