Breaking News

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குரூப் 1 தேர்வு புத்தகங்களுடன் இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழக அரசு அறிவிப்பு


குரூப் 1 தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர்  என்.சுப்பையன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிகவரி), மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 85 பணி காலியிடங்களுக்கு முதனிலை தேர்வு வருகிற 19.2.2017 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் இத்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் துவங்கப்பட உள்ளது. பயிற்சியில் பாடவாரியான வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பெறும். பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, இப்போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோன்று, பணியாளர் தேர்வாணையத்தால், போஸ்டல் அசிஸ்டென்ட், டேட்டா எண்டரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளர்க், கோர்ட் கிளர்க் உள்ளிட்ட 5134 பணி காலியிடங்களுக்கான தேர்வானது வருகிற 7.1.2017 முதல் 5.2.2017 வரை நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வுக்காக புத்தகங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் துவங்கப்பட உள்ளது. தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.