Breaking News

மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு


ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல்ல திட்டம், உயரிய திட்டம் என்றாலும் கூட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கையில் பணம் இல்லாத நிலைக்கு இது இட்டுச் சென்று விட்டது.

இதனால் மக்கள் மிகப் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.
அதை விடக் கொடுமையாக பணம் பெற வரிசையில் காத்திருந்து, வங்கிகளின் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் காத்துக் கிடந்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்து போயுள்ளனர். இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மறு ஆய்வு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இன்று ஆக்ராவில் அவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதிலிருந்து:
இந்த நாட்டு மக்களை கருப்புப் பணத்தின் பிடியிலிருந்தும், ஊழல் பிடியிலிருந்தும், கள்ளப் பணத்திலிருந்தும் விடுவிக்க பாடுபடுகிறேன். இதற்காக மக்கள் தந்து வரும் ஒத்துழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
எனது நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். இதற்காக வணங்குகிறேன். கடும் சிரமத்திற்கு மத்தியிலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
தலித்துகள், ஆதிவாசிகள், விவசாயிகள், தாய்மார்கள், எல்லோருமே சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கஷ்டம் வீணாகாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தை நான் மரு ஆய்வு செய்வேன். அதில் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறே.. நாட்டின் நேர்மையான மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்கள் பட்ட துன்பம் வீண் போகாது.
இந்தத் திட்டத்திற்காக வங்கி ஊழியர்கள் சீரிய முறையிலும், கடுமையாகவும் பபணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஊழல் செய்தவர்கள் இப்போது ஒழுங்கான பாதைக்குத் திரும்பி வருகின்றனர். மக்கள் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பானது கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். ஏழைகளின் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடித்து வந்தனர். அதை நாங்கள் தடுத்த நிறுத்தப் பாடுபடுகிறோம்