Breaking News

யார் ஒரு சிறந்த ஆசிரியர்?

ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!

ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!
இதுதான் ஆதிக்க வாதிகளின் தாரக மந்திரம். இதனால் தான் தீவிரவாதத்தை வளர்க்க விரும்புபவர்கள் முதற்கட்டமாக அங்கு உள்ள பள்ளிக்கூடத்தை மூடுவர்.


இந்த செயல்கள் நடைபெறுவது ஏன்?

          ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு சமூகத்தை மட்டும் அல்ல, ஒரு நாட்டையே உருவாக்க முடியும். இதனைத்தான் ”அர்த்த சாஸ்திரம்” படைத்த சாணக்கியர் செய்து காட்டினார்.

                    ஆனால் அப்போது இருந்த குருபக்தி சமூகத்தில் இப்போது இருக்கிறதா? இல்லை. இன்று மாணவர்களை படி என்றாலும் தவறு. மாணவர்களை ஒழுக்கமாக இரு என்றாலும் தவறு. உடனடியாக மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் மாணவர் ”தற்கொலை முயற்சி” என ஊடகங்கள் அந்த ஆசிரியரின் மொத்தபணிக்காலத்தையுமே கேள்விக்குறியாக்கிவிடும். இதனால் ”வந்தோமா!, பாடத்தை நடத்தினோமா!” என்று இருந்து விட வேண்டிய சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு கல்வியை மட்டுமே கற்பிப்பவராக எப்போது மாறுகிறாரோ, அன்றே அந்த சமூகம் அழிவை நோக்கி பயணத்தை துவங்கிவிட்டது என பொருள்.

             ஆனால் இச்சூழ்நிலைக்கு ஊடகங்களையும், அரசையும், சமூகத்தையும் மட்டுமே காரணம் என குறை கூறாமல் ஆசிரியர்கள் தங்களையும் திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்கு தான் இக்கட்டுரை.

         முந்தைய காலத்தில் கிராமத்தில் உள்ள எந்த வீட்டில் திருமணம் என்றாலும் முதல் பத்திரிக்கை ஆசிரியருக்கு தான் தரப்படும். அதே போன்று திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய சிறிய பிரச்சினை என்றாலும் சரி, ஊரே கூடி இருக்கும் பொதுப்பிரச்சினை என்றாலும் சரி, அந்த பஞ்சாயத்தில் ஆசிரியருக்கு நிச்சயம் ஒரு மதிப்பு மிக்க இடம் உண்டு. இவ்வளவு ஏன் அக்கிராமத்தில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் கூட ஆசிரியருக்கு முதல் தகவல் தரப்படும். அவர் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அடுத்த செய்யவேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, அங்கு உள்ளவர்களை முடுக்கிவிடுவார்.

             இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரை உடன் இருந்த ஆசிரியர்கள் இன்று மெல்ல காணாமல் போய்விட்டனர். பாடம் கற்பிக்க மட்டுமே ஆசிரியர் என்றால், எந்த ஒரு ஆசிரியருமே முழுமையான ஆசிரியராக இருக்க மாட்டார். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒரு திறமை இருக்கும். அவ்வாறு அனைத்து ஆசிரியர்களிடமும் இருக்க வேண்டிய திறமைகளை புகுத்தி பாடம் நடத்த ஒரு ரோபோ போதும்.

          ஆனால் அதையும் தாண்டி ஆசிரியர் பணி புனிதமானது. கற்பிப்பதை விடுத்து, மாணவன் கற்றலில் ஈடுபட தூண்டுவது தான் ஆசிரியரின் பணி. தங்களின் கீழ் பயிலும் ஒவ்வொரு மாணருக்கும் நெருங்கிய நண்பனாக, நல்ல வழிகாட்டியாக, மாணவன் மதிக்கக்கூடியவனாக இருக்கவேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை.

செய்ய வேண்யது என்ன?

கருத்து 1-
           தங்களிடம் பயிலும் மாணவர்களின் சுக, துக்கங்களை தங்களிடம் பகிர்ந்துகொள்ள ஊக்குவியுங்கள். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் குறைந்த பட்சம் மூன்று மாணவர்கள் வீட்டிற்காவது சென்று அவர்களை பற்றிய கேஸ் ஸ்டடி செய்யுங்கள். அவரவர்களின் குடும்பத்தோடு பழகி அம்மாணவர்களின் குடும்ப சூழல்களை உணருங்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களோடு அறிமுகத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையேயான இடைவெளியை விரைவில் நீக்க இயலும். அக்கிராமத்தில் ஒருவராக மாற இயலும். ”இந்த ஆசிரியரா? இவர் நம் பிள்ளையை கண்டித்திருந்தாலும், நல்லதுக்கு தானே கண்டித்திருப்பார்.” என்ற நம்பிக்கையை பெற்றோர்களிடம் ஏற்படுத்துங்கள்.

கருத்து 2-  
  
                நீங்கள் ஒன்றாம் வகுப்பு ஆசிரியரோ, 5 ஆம் வகுப்பு ஆசிரியரோ, 10ஆம் வகுப்பு ஆசிரியரோ அல்லது 12 ஆம் வகுப்பு ஆசிரியரோ  யாராக இருந்தாலும் உங்களிடம் பயிலும் மாணவர்களில் குறைந்தபட்சம் நான்கு மாணவர்களையாவது ஒவ்வொரு வருடமும் மனதளவில் தத்தெடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் படிப்பதற்கு உதவும் கையேடுகள் வழங்குவது முதல், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது வரை அவர்கள் பணியில் சேர்ந்து வாழ்வில் செட்டில் ஆகும் வரை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் ”ரமணா” பட பாணியில் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு உங்களிடம் அருமையான மாணவர் குழுமம் கிடைக்கும். செட்டில் ஆகிய மாணவர்கள் ஒவ்வொருவரும் இதே போல் வருடத்திற்கு நான்கு மாணவர்களை தத்தெடுத்துக்கொள்ள ஊக்குவியுங்கள். நாளைய சமூகம் அன்பும் நேசமும் மிக்கதாக உருவாகும்.

நல்லதே நினையுங்கள்!
நல்லதே நடக்கும்!