Breaking News

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்: பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்


வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெற்றது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
 பெயர் சேர்ப்பு, விவரங்கள் திருத்தத்துக்காகப் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி-மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீதுள்ள விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு, விண்ணப்பதாரர்களின் இருப்பிட விவரங்களை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் ஒரு இடத்தில் பெயர் நீக்கத்துக்கான துண்டறிக்கையை வழங்குகின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடவடிக்கையை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.