Breaking News

சென்னையில் 250 செ.மீ. மழை கொட்டுமா? நாசா கூறியதாக வாட்ஸ்அப்-ல் பரவும் தகவல் உண்மையில்லை


வருகிற 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் மிகவும் பலத்த மழை பெய்யும். அது 250 செமீ அளவுக்கு இருக்கும் என நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் வாட்ஸ்அப் செயலிக்கு இந்த செய்தி 'பார்வர்டு'  செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 21 அல்லது 22 ஆம் தேதி கடும்புயல் வீசும். மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 250 செ.மீ மழை பெய்யும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தி  குறித்து வானிலை அதிகாரிகளிடம் விசாரித்ததில், சென்னையில் வரும் நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றனர். மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று மறுத்துள்ளது.

எப்படி இத்தகைய எச்சரிக்கை செய்திகள் கிளப்பி விடப்படுகின்றன? யார் இதை பரப்பிவிடுகிறார்கள்? என்றே தெரியவில்லை.

நாசா-வின் எச்சரிக்கை செய்தி கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, ஹெலன் புயல் வீசியபோது விடுக்கப்பட்டது என சில இணையதள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

மழை, வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய விஷம செய்திகளை பரப்புவர்கள் மீது சைபர் க்ரைம் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு தனி நபரும், தங்களுக்கு வரும் செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து, பிறருக்கு அனுப்பினால் மட்டுமே, இத்தகைய விஷம செய்திகள் பரவுவதை தடுக்க முடியும்.