த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ரூ.4,200ம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு நிலை, தேர்வு நிலைக்கு தனி ஊதிய விகிதம், தர ஊதிய நிர்ணயம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 2012–ம் ஆண்டு நேர்முக தேர்வு மூலம் பணியில் சேர்ந்தார்கள். தற்போது பள்ளி கல்வித்துறை போட்டி தேர்வு நடத்தி அவர்களை பணி நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே பள்ளி கல்வித்துறை மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டி தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் 652 பேரை தேர்வு செய்தது. பின்பு போட்டி தேர்வில் கேள்விகள் சரியானதாக இல்லை என்று கூறி அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாக இருக்கின்றனது. எனவே ஆசிரியர்களை தகுதி தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்களின் பணி பாதுகாப்புக்கு உரிய புதிய சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியதாரர்ளுக்கு தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தவிர்த்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். இதனால் 40 ஆயிரம் ஓய்வூதிய பெறுவோர் பயன் அடைவார்கள்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளோடு, கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும். இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தி, போராடி வருகிறார்கள்.
இப்போது தேர்வு காலம் என்பதால் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத்தோடு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வழி வகுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.