அரசுப் பள்ளிகளில், கலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்குபுத்தகங்களேதெரியாமல், பள்ளிக்கல்வித் துறை பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் புத்தகங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.தொகுப்பூதியம்தமிழக அரசுப் பள்ளிகளில், தொகுப்பூதியத்தில், 16,549 கலை ஆசிரியர் பணியாற்றுகின்றனர்.
ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட, பல்வேறு தொழிற்கல்வி கற்பிக்கும் பணியில், இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்த உள்ளது. இத்தேர்வு எப்போது நடக்கும் என, தெரியாது. எனினும், போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தேடுகின்றனர்: இதில், இடம் பெற்று உள்ள பாட விவரங்கள் குறித்து எந்தப் புத்தகமும், குறிப்பேடும் இல்லாததால், புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என, ஆசிரியர்கள் ஊர் ஊராகத் தேடி வருகின்றனர். பாடத்திட்டத்தை தயாரித்த, பள்ளிக் கல்வித் துறையின் மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர்கள் கேட்டபோது, 'எங்களிடமே இந்த புத்தகம் இல்லை' என, தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடர்வோம்:
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:போட்டித் தேர்வுக்கு, 10ம் வகுப்பை அடிப்படைக் கல்வித் தகுதியாக நிர்ணயித்துள்ளனர். ஆனால், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் கூட தெரிந்து கொள்ள முடியாத பாடத் திட்டத்தை, ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர். பாடத்திட்டம் தயாரித்த அதிகாரிகளுக்கே, இதற்கு என்ன புத்தகம் படிப்பது என, தெரியவில்லை. எனவே, பாடத் திட்டத்தை மாற்றி, எளிமையாக புத்தகம் கிடைக்கும் விதமாக வெளியிட வேண்டும். கோரிக்கையை ஏற்கா விட்டால், போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.