Breaking News

பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கோயிலில் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள்சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கொத்தமங்கலத்தில் பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு முடியும் வரை கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை எனகிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் தற்போது தினமும் கோயிலில் சிறப்பு வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிராமத்தினரின் இத்தகைய முடிவால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கிராமத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.