Breaking News

பிளஸ் 2 தேர்வு முறைகேடு: 36 பேர் நேற்று சிக்கினர்


சென்னை: பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், 12 பேர். அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று, ஆங்கிலம் முதல் தாளுக்கு தேர்வு நடந்தது. ஏழு பக்கங்கள் அடங்கிய வினாத்தாளில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 'ஆப்ஷனல்' வினா உட்பட மொத்தம், 69 கேள்விகள் இருந்தன. முதல் தாளில், பெரும்பாலானவை ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள். நூறு வார்த்தைகளுக்கு, ஒரு பத்தி எழுதும் திறன் குறித்த வினாவில், 'சத்தியாகிரகப் போராட்டத்தில் பெண்களை காந்திஜி எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்?' என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.

வினாத்தாள் குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது: ஆங்கிலக் கவிதை குறித்த வினா, இலக்கணம் தொடர்பான வினாக்கள், தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு கடினமாக இருந்தன; ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு எளிதாக இருந்தன. மொழி மாற்றம் குறித்த வினா, அனைவருக்கும் எளிமையாக இருந்தது. இவ்வாறு கூறினர். நேற்று, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 36 தேர்வர்கள் சிக்கினர். அதில், 12 பேர் பள்ளி மாணவர்கள்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள்.